தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரை கரீம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாநில போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வலுக்கட்டாயமாக கைது செய்தனர். படம்: பிடிஐ 
இந்தியா

பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிவு விவகாரம் - தெலங்கானா மாநில பாஜக தலைவர் நள்ளிரவில் திடீர் கைது

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானாவில் 10-ம் வகுப்புபொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்தவிவகாரத்தில் மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானாவில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதில் முதல் நாளில் தெலுங்கு வினாத் தாளும் இரண்டாம் நாளில்இந்தி வினாத்தாளும் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் வாட்ஸ்-அப்பில் கசிந்தன. தெலங்கானாவில் ஏற்கெனவே மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத் தில் கே.சந்திரசேகர ராவ் தலை மையிலான பிஆர்எஸ் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு, பிஆர்எஸ் அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதற்கு முழுப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி பதவி விலக வேண்டும் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கரீம் நகரில் உள்ள மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் வீட்டை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவரைவலுக்கட்டாயமாக கைது செய்து பல இடங்களுக்கு ஜீப்பிலேயே அலைக்கழிக்க வைத்தனர். ஜனகாம மாவட்டம், பாலகுர்த்தி பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அவருக்கு நேற்று மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர். கைது செய்யப்பட்ட 16 மணி நேரத்திற்கு பிறகு நேற்று மாலை 4 மணியளவில் அவரை ஹனுமகொண்டா நீதிமன்றத்தில் வாரங்கல் போலீஸார் ஆஜர் படுத்தினர். பண்டி சஞ்சய் குமாரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக நீதிமன்றத்திற்கு பண்டி சஞ்சய் அழைத்துவரப்படும் கார் மீது பிஆர்எஸ் கட்சியினர் தக்காளி, முட்டை போன்றவற்றை வீசினர். இதனால் அங்கு பாஜக - பிஆர்எஸ் கட்சியினர் இடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து வாரங்கல் போலீஸ் கமிஷனர் ரங்கநாத்நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த வழக்கில்பண்டி சஞ்சய் குமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மாணவர்களை தூண்டும் வகையில் பேசி வருகிறார். தேர்வு நடக்கும்போது இவருக்கும் வாட்ஸ்-அப் மூலமாக வினாத்தாள் நகல் வந்துள்ளது. இதனை இவருக்கு அனுப்பிய 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்” என்றார்.

பாஜக குற்றச்சாட்டு: இது அரசியல் பழிவாங்கும் செயல் என மாநில பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது: பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது எப்படி என ஆராயாமல்வாட்ஸ்-அப்பில் அந்த வினாத்தாள்உள்ளதாகக் கூறி மாநில பாஜகதலைவரை கைது செய்வது என்ன நியாயம்? வினாத்தாள் கசிவு விவகாரம் இதன்மூலம் திசை திருப்பப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தனது மகள் கவிதாவை அமலாக்கத்துறை அடிக்கடி விசாரிப்பதால் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தை பண்டி சஞ்சய் கைது மூலம் பாஜகமீது வெளிப்படுத்தி உள்ளார்.

இது அரசியல் பழி வாங்கும் செயலாகும் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்களில் ஹைதராபாத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத் திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். பாஜக சார்பில்மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை மனதில் கொண்டு சந்திரசேகர ராவ் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார். இவ்வாறு கிஷண் ரெட்டி கூறினார்.

SCROLL FOR NEXT