கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சாரம் செய்ய திட்டம்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காகப் பிரதமர் மோடி பங்கேற்கும் 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை பாஜக-வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிற‌து. தேர்தல் முடிவுகள் 13-ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பாஜக சார்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்ப‌தாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மேலிடத் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கர்நாடக தேர்தலுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்குமாறு கேட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தை ஹைதராபாத் கர்நாடகா, மும்பை கர்நாடகா, கடலோர கர்நாடகா என 6 மண்டலங்களாக பிரித்து புதிய தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளனர். இந்த 6 மண்டலங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த 30 நாட்களில் இந்த 6 மண்டலங்களிலும் 20 பொதுக் கூட்டங்களில் மோடி பேச இருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக மே 6-ம் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை கர்நாடகாவிலே தங்கி இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரத்தையும் மேற்கொள்வார். அதன் மூலம் மக்கள் மனதை மோடி கவர்ந்து விடுவார் என பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 3 மாதங்களில் 8 முறை கர்நாடகாவுக்கு வந்து மோடி மறைமுகமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT