புதுடெல்லி: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளான யாசின் பட்கல் உள்ளிட்ட 11 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் அமைப்புகளுடன் சேர்ந்து ஆட்களை தேர்வு செய்ததாக இந்தியன் முஜாகிதீன் உறுப்பினர்கள் மீது என்ஐஏ கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்தது. யாசின் பட்கல், இக்பால் பட்கல், ரியாஸ் பட்கல், அமீர் ரெசா கான், தெசின் அக்தர் ஆகியோர் முக்கிய சதிகாரர்கள் எனவும் ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை இவர்கள் நடத்தியுள்ளதாகவும் என்ஐஏ வாதிட்டது. இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய சதியில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் என்ஐஏ கூறியது.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூடுதல் அமர்வு நீதிபதி சைலேந்திர மாலிக் கடந்த 31-ம் தேதி கூறினார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சதி செய்ததற்காக யாசின் பட்கல் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி சைலேந்திர மாலிக் நேற்று உத்தரவிட்டார். அதேவேளையில் 3 பேரை அவர் வழக்கிலிருந்து விடுவித்தார்.
இதையடுத்து 11 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.