இந்தியா

நரேந்திர மோடி உணர்வற்றவர்: சரத் பவார் தாக்கு

செய்திப்பிரிவு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உணர்வற்றவர் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் விமர்சித்துள்ளார்.

மோடிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது; அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அண்மையில் சரத் பவார் விமர்சித்திருந்தார். அவரது பேச்சு கிளப்பிய சர்ச்சை நீங்குவதற்குள் மீண்டும் மோடியை விமர்சித்துள்ளார் பவார்.

மத்தியப் பிரதேச மாநிலம் அலிபக் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சரத் பவார் இதனை தெரிவித்துள்ளார்.

"குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜாபர் அலி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள காந்திநகரில்தான் மோடி இருந்தார். ஆனால், ஜாபர் அலி வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லக் கூட்ட மோடி முற்படவில்லை. இப்படி உணர்வற்ற ஒரு தலைவர் பல்வேறு சாதிகளையும், மதங்களையும் சேர்ந்த மக்களை எப்படி பாதுகாப்பார்?" என்றார் சரத் பவார்.

மேலும், "தேர்தல் முடிவதற்கு முன்னரே பாஜக பிரதமர் வேட்பாளரை அறிவித்துள்ளது. இது முறையல்ல. தேர்தலுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெறும் கட்சியின் எம்.பி.க்கள் சேர்ந்தே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது மரபு" என்றார் அவர்.

சர்வாதிகாரம்:

பின்னர் பேசிய அம்மாநில முதல்வர் பிருதிவிராஜ் சிங் சவான், மோடி ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படுகிறார் என்றார்.

அவரது நடவடிக்கையால் கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும் கூறினார். ஜஸ்வந்த் சிங் கண்ணீர் சிந்தியது வருத்தமளிப்பதாக கூறினார்.

SCROLL FOR NEXT