இந்தியா

“ஏனெனில், நமது பிரதமர் மோடி” - ராகுல் குறித்த ஜெர்மனி கருத்தை முன்வைத்து பாஜக, காங்கிரஸ் இடையே மோதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதை வைத்து காங்கிரஸும் பாஜகவும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளன.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டெல்லியில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டியவரை, ராகுல் காந்தி நீதிமன்றத்தைத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு வந்தபின்னரே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா என்பதெல்லாம் தெளிவாகும். அந்த வழக்கில் நீதித் துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்தை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்திற்கும் ரிச்சர்ட் வாக்கருக்கும் நன்றி. இந்தியாவில் ராகுல் காந்தி வழக்கின் மூலம் ஜனநாயகம் எப்படி சமரசம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனித்துள்ளீர்கள். அதற்காக நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அந்நிய சக்திகளை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்திய நீதித் துறையில் எந்த அந்நிய சக்தியும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்தியா இனி ஒருபோதும் அந்நிய ஆதிக்கத்தை அனுமதிக்காது. ஏனெனில் நமது பிரதமர் நரேந்திர மோடி" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் துறை தலைவர் பவன் கேரா, "திரு.ரிஜிஜூ அவர்களே. நீங்கள் ஏன் பிரதான பிரச்சினையில் இருந்து திசை மாறுகிறீர்கள். ராகுல் காந்தியின் கேள்வி அதானி பற்றியது. நீங்கள் முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள். அதைவிடுத்து மக்களை திசை திருப்பாதீர்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரத்தில் கருத்து சொன்ன முதல் நாடாக ஜெர்மனி இருக்கிறது. இந்நிலையில் அந்தக் கருத்து தற்போது உள்நாட்டில் விவாதப் பொருள் ஆகியுள்ளது.

SCROLL FOR NEXT