புனேவில் மருத்துவமனை பில் அதிகமாக வந்தது என்றுகூறி தனக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரைக் கத்தியால் குத்தியுள்ளார் 75 வயது நோயாளி ஒருவர்.
அவருக்கு எதிராக அபிருச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிர ஆஸ்துமா காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயது நபர் மாருதி ஷிர்வாலே. அவருக்கு மருத்துவர் சந்தோஷ் அவாரி என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். மருத்துவமனைக் கட்டணம் அதிகமாக வந்ததால் நோயாளி மாருதி, மருத்துவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவாரிக்கு வயிற்றுப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விசாரணையில் மாருதி மதுவின் பிடியில் இருந்து விடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறும்போது, ''நோயாளியின் உறவினர்கள் மருத்துவர் சந்தோஷ்தான் மாருதியின் சிகிச்சைக்கான கட்டணத்தை உயர்த்தி விட்டதாகக் கூறியுள்ளனர்'' தெரிவித்தனர்.
ஆனால் இது குறித்துப் பேசும் மருத்துவர் சந்தோஷ், ''மாருதிக்கு சிகிச்சை தொடர்ந்து தேவைப்பட்டதால் பில் எதுவும் தயாரிக்கப்படவில்லை. எனினும் சம்பவம் நடந்த பிறகு மருத்துவமனைக் கட்டணத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாருதியை வேறு மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று அவரின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளேன்'' என்றார்.
இந்த சம்பவம் குறித்துப் பதிவான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதில் மருத்துவர் சந்தோஷ் ஒவ்வொரு நோயாளியாகப் பார்த்து வருகிறார். அவர் மாருதியின் படுக்கைக்கு வரும் முன்னரே, மாருதி தன் தலையணைக்கடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரைக் குத்துவதாக காட்சிகள் உள்ளன.