இந்தியா

கொச்சி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் தரையிறக்கப்பட்டு தீவிர சோதனை

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அந்த விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 3 மணி நேர தீவிர சோதனைக்குப் பிறகு விமானம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது.

கடந்த திங்கள்கிழமை இரவு 8.40 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியா-047 விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 156 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய‌ அரை மணி நேரத்தில் கொச்சி விமான நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம மனிதர், 'கொச்சி-டெல்லி விமானத்துக்கு ஆபத்து. உடனடியாக அதில் இருப்பவர்களின் உயிரை காப்பாற்றுங்கள்' என பதற்றமான குரலில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக‌ கொச்சி விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப் போது அந்த விமானம் பெங்களூருக்கு அருகே பறந்து கொண்டிருந்ததால் உடனடியாக பெங்களூர் கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானம் 9.35 மணிக்கு அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த 164 பேரையும் உடனடியாக கீழே இறக்கிய பெங்களூர் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதனிடையே வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவும் விமானத்துக்கு சென்று அனைத்து பொருட்களையும் தீவிரமாக சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீஸார் 164 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஈடுபட்ட பெங்களூர் மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் கமல் பாண்ட் கூறியபோது, ''விமானத்தில் 3 மணி நேரம் சோதனை நடத்தினோம். சந்தேகத்திற்கிடமாக எந்த பொருளும் கிடைக்கவில்லை.பயணிகளிடமும் விமான ஊழியர்களிடமும் விசாரித்ததில் எவ்வித அச்சுறுத்தலும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே நள்ளிரவு 1.50 மணிக்கு அந்த விமானம் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது'' என்றார்.

கொச்சி விமான நிலையத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த நபர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டபோது, கொச்சி-டெல்லி விமானத்திலும் விமான‌ நிலையத்திலும் அசம்பாவிதம் ஏற்பட போகிறது என தன்னுடைய தோழி தகவல் அளித்ததாக கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் பெங்களூர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT