உத்தம்பூர்: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃப்ரூக் அப்துல்லா ஆற்றிய உரை ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. "கடவுள் ராமரை அல்லாவே அனுப்பி வைத்தார்" என்று பாகிஸ்தான் எழுத்தாளர் ஒருவர் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை மேற்கோள்காட்டி ஃபரூக் அப்துல்லா பேசியதே இந்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
காஷ்மீரின் உத்தம்பூர் நகரில் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், "நான் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கடவுள் ராமர் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவர் இல்லை. அவர் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மற்றவர்களுக்கும் உரித்தானவர். அதேபோல்தான் அல்லாவும் முஸ்லிம்களுக்கான கடவுள் மட்டுமே அல்ல. அவரும் அனைவருக்குமான கடவுள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் ஒருவர் இதனைக் கூறியிருக்கிறார். அவர் அண்மையில்தான் காலமானார். அவர் தன்னுடைய புத்தகத்தில் "ராமரை இந்துக்களின் கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வாக்குகளுக்காகவே அப்படிச் செய்கின்றனர். கடவுள் ராமர் எல்லோருக்குமானவர். மக்களுக்கு நல்வழியைக் காட்ட அல்லாவே அவரை அனுப்பி வைத்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் நாங்கள் மட்டும்தான் ராமரின் பக்தர்கள் எனக் கூறுபவர்கள் முட்டாள்களே. அவர்கள் ராமரை விற்கின்றனரே தவிர, அவர்களுக்கு ராமர் மீது ஈடுபாடு இல்லை. அவர்கள் ஈடுபாடு எல்லாம் ஆட்சி, அதிகாரம் மீதே இருக்கின்றது.
ராமர் கோயிலைக் கட்ட பெருமளவில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். தேர்தலை ஒட்டி ராமர் கோயிலை நிச்சயமாக திறப்பார்கள். உங்கள் எல்லோரிடமும் அதைச் சொல்லியே ஓட்டுக் கேட்பார்கள். ஆனால், நீங்கள் அனைவருமே உங்களுடைய வாக்குகளின் சக்தியை உணர்ந்து செயல்படுங்கள்.
இந்த நாட்டிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை விரட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் எப்படி ஒன்றிணைந்து போராடினர் என்பதை நினைவுகூர்ந்திடுங்கள். அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மதம், சாதி என எந்தப் பிரிவினையும் பார்க்கவில்லை. அவர்களது இலக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேற்றுவதாக மட்டுமே இருந்தது. அதனால் சுதந்திரப் போராட்ட வீரர்களை மனதில் கொள்ளுங்கள். அவர்கள்தான் உங்களுக்கு வாக்களிக்கும் சக்தியையும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மாற்றும் சக்தியையும் கொடுத்தனர்" எனப் பேசியிருந்தார். அவரது கருத்து இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.