மும்பையின் எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் மக்கள் நடைபாதை மேம்பாலத்தில் திடீரென மக்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 22 பேர் பலியாகி, பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். பலியானோரில் பெண்கள் அதிகம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். மும்பையில் கனமழை பெய்து வரும் நேரத்தில் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இன்று காலை 10.40 மணியளவில் நடைபாதை மேம்பாலத்தில் கடும் கூட்ட நெரிசல் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மின்கசிவு ஏற்பட்டதாக விளைந்த வதந்தி என்று ஒரு தரப்பினர் கூற ரயில்வே போலீஸ் அதிகாரி கூறும்போது, “கனமழை பெய்ததால் இந்த நடைபாதை மேம்பாலத்தில் மழைக்காக ஒதுங்கியவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நடைபாதை மேம்பாலத்தின் தகரக்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மக்களிடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டு முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயன்றதில் கடும் நெரிசல் ஏற்பட்டது” என்றார்.
இதில் 22 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர், காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூத்த அதிகாரிகள், ரயில்வே நிர்வாகிகள், ரயில்வே போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களிடம் இன்று வாக்குமூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.