திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மாணிக்யாலா புதன்கிழமை கடப்பாவில் தெரிவித்தார்.
ஏழுமலையானை சாதாரண நாட்களில் தரிசனம் செய்ய சுமார் 2 முதல் 5 மணி நேரம் வரை ஆகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 10-15 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
பிரம்மோற்சவம், மற்றும் கோடை விடுமுறையில் 24 மணி நேரம் கூட காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை சமாளிக்க தற்போது திருப்பதி தேவஸ்தானம், 3 வரிசை தரிசன முறையை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக பக்தர்கள் எந்தவித தள்ளுமுள்ளும் இன்றி தரிசித்து வருகின்றனர். ஆனாலும், பல மணி நேரம் ஆவதாக புகார்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் மாணிக்யாலா, கடப்பா மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டார். தெவுன்னி கடப்பா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆந்திர மாநிலத்தில் அறநிலைத்துறைக்கு சொந்த மான சுமார் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
இனி விரைவாக தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க தேவஸ்தான அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அடுத்த மாதத்திற்குள் ஏழுமலையானை பக்தர்கள் இரண்டு மணி நேரத் திற்குள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.