காங்கிரஸுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரக்கோரி மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு காங் கிரஸுக்கு உரிமை உள்ளது என்று சோனியா திங்கள்கிழமை கூறியிருந்த நிலையில் இக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமிரீந்தர் சிங், மல்லிகார்ஜூன கார்கே, கட்சி கொறடா ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்காக நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன்படி, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பலம் தங்கள் கட்சிக்கு இருப்பதாகவும், அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் கட்சிக்கு மக்களவைத் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பு தரப்பட வேண்டும். அதற்காக நான் 60 ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.பி.க்களின் கையெழுத்துக்களை பெற்று, எங்களுக்கு உள்ள ஆதரவை சபாநாயகரிடம் தெரியப்படுத்தினேன். இதில் எந்த விதமான நடைமுறை சிக்கல் இருக்காது என நாங்கள் நம்புகிறோம்" என்றார்.