இந்தியா

மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவைத் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் என்று அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் மாயாவதி.

தனது பிறந்தநாளையொட்டி நடந்த பொதுக்கூட்டம், பேரணியில் புதன்கிழமை அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்பட எந்த கட்சியுடனும் பகுஜன் சமாஜ் கூட்டணி வைக்காது.

உத்தரப் பிரதேசத்திலும் சரி, தேசிய அளவிலும் சரி பகுஜன் சமாஜ் கட்சி தனித்து தேர்தலில் போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் என பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மையானவை அல்ல.

குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்துக்கு மாநில முதல்வர் நரேந்திர மோடியே காரணம். 6 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் முதல்வரால் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேயான கலவரத்தை தடுக்க முடியாமல் போனால் வெவ்வேறு ஜாதி, மதங்களுக்கு மத்தியில் அவரால் எப்படி ஒற்றுமை ஏற்படுத்த முடியும்.

குஜராத்தை உதாரணமாக கொண்டு நாட்டை மேம்படுத்துவேன் என்று தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் உறுதி அளிக்கிறார் மோடி. மாநிலத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் மோடி, நீதிமன்றத்தின் ஆணைக்குப் பிறகே, ஊழலை கண்காணிக்கும் அமைப்பான லோக் ஆயுக்தாவை நிறுவினார்

தலா 6 மாதத்துக்கு ஆட்சி என்ற உடன்பாட்டில் இரு கட்சிகளுமாக இதற்கு முன் உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அரசு அமைத்தோம். அப்போது மத்தியில் ஆட்சி வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி, முன்னதாகவே மக்களவைத் தேர்தல் நடத்தினால் மாநிலத்தில் கூடுதல் இடங்களில் வென்று 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆட்சியில் நீடிக்கலாம் என்று கருதியது. உத்தரப்பிரதேசத்தில் நீங்களே 5 ஆண்டு ஆட்சி செய்யுங்கள், ஆனால் எங்களுடன் கூட்டணி வைத்து அதிகபட்ச எம்பி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று 2003ல் நிர்ப்பந்தித்தது. இதற்கு அடிபணிந்தால் பகுஜன் சமாஜ்கட்சி இருக்கும் இடம்தெரியாமல் போய்விடுமே என கருதினோம். இதையடுத்து கூட்டணி வைக்கும்படி சிபிஐ மூலமாக நெருக்குதல் கொடுக்கப்பட்டது. ஆனால் சுயமரியாதை கருதி 2003 ஆகஸ்ட்டில் பதவி விலகினேன்.

காங்கிரஸ் மீது தாக்கு

கொள்கைகள் நல்லதாக இருந்தால் மட்டும் போதாது.அவற்றை அமல்படுத்துவதிலும் நல்ல நோக்கம் இருக்கவேண்டும். சில கட்சிகள் வாக்குறுதி தருகின்றன. ஆசை வார்த்தை காட்டி இழுக்கின்றன. பாமர மக்களின் நலனுக்காக உழைத்து முன்னேற்றம் காணவேண்டும் என்ற கொள்கை கொண்டது பகுஜன் சமாஜ் கட்சி.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் நாட்டில் உள்ள ஏழைகள், விவசாயிகள், சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடந்த பேரணியிலும் மாயாவதி பேசினார்.

அப்போது தலித்தை பிரதமர் பதவியில் அமர்த்துவதாக எதிரிகள் ஆசைவார்த்தை பேசுவார்கள்.இதில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். பிரதமர் பதவியிலும் முதல்வர் பதவியிலும் அமர்த்தினாலும் அது குறுகிய காலத்துக்கே இருக்கும். சாதிய கண்ணோட்டம் உள்ளவரிடமே உண்மையான அதிகாரம் இருக்கவேண்டும் என்றார் மாயாவதி.

SCROLL FOR NEXT