உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள இராக்கிலிருந்து 180க்கும் அதிகமான இந்தியர்கள் திங்கள் கிழமை தாயகம் திரும்பினர். இதனால் இராக்கிலிருந்து தாயகம் திரும்பியோரின் எண்ணிக்கை 3,500யைத் தாண்டியுள்ளது.
இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பகுதிகளில் உள்ள இந்தியர்கள் இராக்கி ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் சிறப்பு விமானம் மூலமாக பஸ்ரா பகுதியில் இருந்து தாயகம் திரும்பினர். இதுவரை இராக்கில் உள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்து வரத் தேவையான விமான டிக்கெட்டுகளில் சுமார் 2,500 டிக்கெட்டுகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச் சகம் வழங்கியுள்ளது. மேலும் 1,000 டிக்கெட்டுகள் இராக்கில் இந்தியர் கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இராக்கில் தீவிர வாதிகளின் பிடியில் சிக்கியுள்ள மேலும் 39 இந்தியர்களை அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து வளைகுடா நாடுகளுட னும் இந்தியா தொடர்பு கொண்டுள்ளது. போர் வெடிப்பதற்கு முன்பு இராக்கில் சுமார் 10,000 இந்தியர்கள் இருந்தனர். இவர்களில் பலர் குர்திஸ்தான் மற்றும் பஸ்ரா பகுதிகளில் உள்ளனர். தற்போது போர் பாதிக்காத பகுதிகளில் சுமார் 6,500 இந்தியர்கள் இருக்க, மற்றவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.