மும்பை மீது தாக்குதல் நடத்தப் போவதாக தீவிரவாதிகள் மிரட் டல் விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த நகரம் முழு வதும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு அண்மை யில் ஒரு கடிதம் வந்தது. அதில் பாலஸ்தீனத்தின் காஸா தாக்குதலுக்குப் பதிலடியாக மும்பை நகரம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் இறுதியில் இந்தியன் முஜாகிதீன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடையது என்பதால் மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து பல்வேறு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தவர் ஆவார். தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் பலரை வளைத்துப் பிடித்தவர்.
“மும்பையை தாக்கப் போகிறோம், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்” என்று அவருக்கு நேரடியாக சவால் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால் நகரின் அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப் பட்டுள்ளன.