கோஹிமா: நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
அந்த மாநிலத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதில் என்டிபிபி கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் 23, நாகா மக்கள் முன்னணி 22 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் என்டிபிபி கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான பாஜக 12 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
நாகாலாந்து முதல்வரும் என்டிபிபி மூத்த தலைவருமான நெய்பியூ ரியோ, வடக்கு அங்காமி-2 தொகுதியில் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
நாகாலாந்து பாஜக தலைவர் டெம்ஜென் இம்னா, அலோங்டெகி தொகுதியில் போட்டியிட்டார். அவர் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸுக்கு பூஜ்ஜியம்: காங்கிரஸ் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஓரிடத்தில்கூட அந்த கட்சி வெற்றிபெறவில்லை. இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் 7, தேசிய மக்கள் கட்சி 5, இந்திய குடியரசு (அத்வாலே) கட்சி 2, நாகா மக்கள் முன்னணி 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி 2, ஐக்கிய ஜனதா தளம் ஓரிடத்தில் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.