விஜய்குமார் சின்ஹா 
இந்தியா

தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார் - சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அம்மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆவேசமாகப் புகார்எழுப்பி, வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பணியாற்றும் பிஹார்வாசிகள் தாக்கப்படுவதாக ஒரு காட்சிப் பதிவு வெளியானது. அதேபோல், பிஹார்வாசிகளும் தமிழர்களை ஓட, ஓட விரட்டி தாக்குவதாக ஒருகாட்சிப் பதிவு வெளியானது. இவை இரண்டும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இவற்றை தமிழக காவல்துறை விசாரித்து, அவை போலியானப் பதிவுகள் என உறுதிப்படுத்தியதாக செய்தி வெளியானது. இந்த விவகாரத்தை நேற்று பிஹார் சட்டப்பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக எழுப்பியது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் சின்ஹா பேசியதாவது: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் பிஹார்வாசிகள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இதுவரை இருவர் பலியானதுடன், சுமார் 50 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காட்சிப் பதிவுகளை பிஹார்வாசிகள், தமிழகத்திலிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக, அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிட்டவர்கள், பிஹார் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிஹார் திரும்ப விரும்புவோருக்கு ரயில்களிலும் இடம் கிடைக்கவில்லை. தாம் வசிக்கும் அறைகளிலேயே அஞ்சியபடி ஒளிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் உதவ வேண்டியும் அவர்கள் கெஞ்சுகின்றனர். எனவே இவர்களது பாதுகாப்பை பிஹார் அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு விஜய்குமார் சின்ஹா பேசினார். இவருக்கு ஆதரவாக இதர பாஜக எம்எல்ஏக்களும் ஆவேசமாகக் குரல் கொடுத்தனர். இதையடுத்து தங்கள் எதிர்ப்பை வலியுறுத்தும் வகையில் பாஜக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இப்பிரச்சினை குறித்து, தமக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் பிஹார்வாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு முதல்வர் நிதிஷ் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT