கன்ராட் சங்மா 
இந்தியா

மீண்டும் பாஜக.வுடன் சேர்ந்து மேகாலயா மாநிலத்தில் கூட்டணி ஆட்சி - முதல்வர் கன்ராட் சங்மா சூசகம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. முன்னதாக வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.

தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேகாலயாவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால், ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி கட்சி வெளியேறியது. தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு வெளியான நிலையில், இதுகுறித்து என்பிபி தலைவரும் முதல்வருமான கன்ராட் சங்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்போம். மேலும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக தேசிய அளவில் குரல் கொடுக்கும் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காவிட்டால், பாஜக.வுடன் மீண்டும் கூட்டணி அல்லது ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் உள்ள கட்சிகளுடன் (காங்கிரஸ் அல்லது திரிணமூல் காங்கிரஸ்) இணைந்து ஆட்சி அமைப்பதற்கு சங்மா தயாராக இருப்பதையே காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT