இந்தியா

வீட்டு வாடகை செலுத்த ‘கிட்னி விற்பனைக்கு’ - பெங்களூரு இளைஞர் விளம்பரம்

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த ரம்யாக் ஜெயின் (34) என்பவர் அண்மையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வித்தியாசமான விளம்பரம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

அதாவது, ''எனது இடது கிட்னியை (சிறுநீரகம்) விற்பனை செய்ய இருக்கிறேன். வீட்டு வாடகை மற்றும் முன் பணம் செலுத்த வேண்டி இருப்பதால், இந்த முடிவை எடுத்திருக்கிறேன்''என குறிப்பிட்டிருந்தார். அந்த சுவரொட்டியில் அவரை தொடர்புக் கொள்ள QR குறியீடு மூலம் முகவரி விபரத்தை பகிர்ந்திருந்தார்.

இந்த 'கிட்னி விற்பனைக்கு' போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ட்விட்டரில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரது விளம்பரத்தை பார்வையிட்டனர். அதற்கு ஒரு பதிவாளர், ''சரியான கிட்னியை விற்பனைக்கு வைத்திருந்தால் வாங்குவதற்கு போட்டி இருக்கும். இந்தியாவில் இடது கிட்னியை பெரும்பாலும் யாரும் வாங்க மாட்டார்கள்''என கிண்டல் செய்தார்.

இதற்கு ரம்யாக் ஜெயின், 'நகைச்சுவைக்காக கிட்னி விற்பனைக்கு என விளம்பரம் செய்தேன். இந்திரா நகர் பகுதியில் வீடு தேடி களைத்து போய் விட்டேன். வீட்டு வாடகை அதிகரித்துவரும் நிலையில், வீட்டு உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் முன் பணம் கேட்கிறார்கள். அதனை செலுத்த வேண்டுமென்றால், கிட்னியை விற்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதை சுட்டிக்காட்டவே அவ்வாறு விளம்பரம் செய்தேன்'' என விளக்கம் அளித்தார்.

SCROLL FOR NEXT