கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் கழிவறை வசதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், மக்கள் ஆதரவை திரட்டி தூய்மை இந்தியா திட்டத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக. ‘தூய்மையே சேவை’ என்ற பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இது வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரபல தொழிலதிபர்கள், முன்னணி விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி விரும்பினார். பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் தூய்மை இலக்கை அடைய முடியும் என்று அவர் நம்பினார்.
எனவே, தூய்மை இந்தியாவை உருவாக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். தூய்மையை வலியுறுத்தி நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கு பெறுங்கள். இந்த பிரச்சாரம் வெற்றி பெற உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்க முன்வர வேண்டும். தூய்மை இந்தியா திட்டம் என்பது மிகவும் உன்னதமான சேவை. இதன்மூலம் ஏழைகள், பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்ய முடியும். அசுத்தமான சுற்றுப்புறம், சமூகத்தில் நலிவடைந்த மக்களைக் கடுமையாக பாதிக்கும். ஜெய் ஹிந்த். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
மேலும், கடந்த 9-ம் தேதி மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மோகன்லால் பதில் அளிக்கையில், “தூய்மையே சேவை பிரச்சாரத்துக்கு எனது ஆதரவு உண்டு. உன்னதமான இந்த பிரச்சாரத்தில் அனைவரும் இணைந்து புதிய (தூய்மை) இந்தியாவை உருவாக்குவோம்” என முகநூலில் பதிவிட்டுள்ளார்.