ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த எரிவாயு கசிவு விபத்து தொடர்பாக மத்திய அரசு, கெயில் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
கிழக்கு கோதாவரி மாவட்டம், மாமிடிகுதுரு மண்டலம், நகரம் கிராமத்தில் கடந்த ஜூன் 27-ம் தேதி, கெயில் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு பைப்லைனில் கசிவு ஏற்பட்டதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 22 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக, விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் கெயில் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.