அங்கீகாரம் ரத்து
தெலங்கானா மேதக் மாவட்டத்தில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட காகதீயா டெக்னோ பள்ளியின் அனுமதியை மாவட்ட கல்வி அதிகாரி ராஜேஷ்வர ராவ் ரத்து செய்வதாக அறிவித்தார். டிராக்டர் டிரைவரை பஸ் ஓட்ட அனுமதித்ததால்தான் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பள்ளியின் அனுமதியை ரத்து செய்ததாக கல்வி அதிகாரி தெரிவித்தார்.
5 முதல் 12 வயது
பிள்ளைகள் புறப்பட்டு அரை மணி நேரத்தில் விபத்து குறித்த தகவல் வந்ததும் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு அலறி அடித்து ஓடினர். இதில் ஒரு மாணவி வீட்டுப் பாடம் எழுதாததால் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடித்துள்ளார். அவரை தாயார் சமாதானம் செய்து கட்டாயப்படுத்தி அனுப்பி உள்ளார். இந்த விபத்தில் அந்த மாணவியும் உயிரிழந்தார். உயிரிழந்த மாணவ, மாணவியர் அனைவரும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
தாமதத்தால் விபரீதம்
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் பகுதியில் இருந்து ஹைதராபாத் செல்லும் இந்த ரயில் புதன்கிழமை இரவு 11 மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள மசாய்பேட்டை ரயில் நிலையத்துக்கு காலை 8.43-க்கு வந்துள்ளது. அங்கு சுமார் 13 நிமிடங்கள் நின்றுள்ளது. பின்னர் 8.46-க்கு புறப்பட்டு ஆளில்லா லெவல் கிராசிங் அருகே பள்ளி பஸ் மீது மோதியுள்ளது.
ஒரு வாரத்தில் ‘கேட்’
தென்மத்திய ரயில்வே துறை பொது மேலாளர் ஸ்ரீவத்ஸவாவுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ் எழுதியுள்ள கடிதத்தில், “ரயில்வே அலட்சியத்தால்தான் இதுபோன்ற விபத்துகள் நேரிடுகின்றன. உடனடியாக தெலங்கானா மாநிலம் முழுவதும் உள்ள ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்கில் கேட் அமையுங்கள்” என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு வாரத்துக்குள் ஆளில்லா லெவல் கிராசிங் அருகே கேட் அமைக்கப்படும் என்று ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளார்.
தந்தைக்கு மாரடைப்பு
பள்ளி பஸ் மீது ரயில் மோதிய விபத்தில் 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
விபத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். குண்டேடுபல்லி கிராமத்தை சேர்ந்த சரண், திவ்யா (அண்ணன், தங்கை), கிருஷ்ணாபூர் பகுதியை சேர்ந்த ரஜியா, ஹமீத் (அக்கா, தம்பி), இஸ்லாம்பூரை சேர்ந்த வருண், ஸ்வாதி (அண்ணன், தங்கை) ஆகியோர் விபத்தில் பலியாகியுள்ளனர். அவர்களது பெற்றோர், குழந்தைகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதது அனைவரின் மனதையும் கரைய வைத்தது. ரஜியா, ஹமீத் ஆகியோரின் சடலங்களை பார்த்ததும் அவர்களது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவர் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.