இராக்கில் கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரும் விடுவிக்கப்பட்டதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்புவதற்காக எர்பில் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மோசுல் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது குர்திஸ்தான் தலைநகரான எர்பில். இராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையினர் போரில் ஈடுபட்டுள்ளனர். திக்ரித், மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிளிர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இராக்கின் திக்ரித் நகரில் இருந்து இந்திய செவிலியர்கள் 46 பேர் கடத்தப்பட்டு மோசுல் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, டெல்லியில் முகாமிட்டார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் பல்வேறுகட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய நர்ஸ்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த 46 நர்ஸ்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.