இந்தியா

சுரங்க முறைகேடு வழக்கில் குமாரசாமிக்கு முன் ஜாமீன்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கடந்த 2001 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் கர்நாடக முதல்வராக இருந்த தரம் சிங் (காங்கிரஸ்), குமாரசாமி (மஜத) உள்ளிட்டோர் சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு சுரங்கம் அமைக்க அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இதில் முதல்வர் அலுவலகத்துக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், குமாரசாமி ரூ.1.7 கோடி லஞ்சம் பெற்றதாகவும் கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸார் 2007-ம் ஆண்டு வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் தரம் சிங், ஐஏஎஸ் அதிகாரி கங்காராம் பதேரியா உள்ளிட்டோர் லோக் ஆயுக்தா போலீஸார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளன‌ர். ஆனால் குமாரசாமி விசாரணைக்கு ஆஜராகாமல் விலக்கு கோரி வந்தார். இது தொடர்பாக லோக் ஆயுக்தா போலீஸார் பெங்களூரு மாவட்ட‌ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஸ்மத் பாஷா, “நாங்கள் சுரங்க முறைகேடு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். குமாரசாமி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் இவ்வழக்கில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்பதால், மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக எவ்வித அழைப் பாணையும் குமாரசாமிக்கு வழங்கப்படவில்லை. எனவே குமாரசாமிக்கு நிபந்தனையற்ற‌ முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுரங்க முறைகேடு வழக்கில் குமாரசாமிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே வேளையில் இன்னும் 7 நாட்களுக்குள் குமாரசாமி லோக் ஆயுக்தா போலீஸார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT