காத்மண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் இதுவரை 95 பேர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ரசுவா மாவட்டத்தில் போட்டே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 95 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 பேர் இந்தியர்கள்.
மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 105 இந்தியர்களை காணவில்லை. இவர்கள் சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ், லீஃப் ஹாலிடே போன்ற சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் சென்றவர்கள் என்று தெரிகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள அரசு மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆனால், வெள்ள நீர் மட்டம் அதிகமாக உள்ள இடங்களில் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை.
இதற்கிடையில், சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்களை அறிய 1234 என்ற கட்டணமில்லை அவசர எண் 1144 என்ற ஹாட்லைன் எண், 98512 89445 என்ற சுற்றுலா காவல் துறை தொடர்பு எண் ஆகியனவற்றை நேபாள சுற்றுலா துறை அறிவித்துள்ளது.
தமிழர்கள் நிலவரம்:
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். காணாமல் போனவர்களை விரைவாக மீட்கும் பணியில் மூத்த அரசு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 57 சுற்றுலாப் பயணிகளில், 20 பேர் குறித்த விவரங்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ரேவதி தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், "20 பேர் குறித்த விவரங்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தற்போது எங்களுக்குத் தெரியவில்லை; கூடுதல் தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம். அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 11 பேர் பெண்கள் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொலைபேசி எண்கள்:
நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், நேபாள வெள்ள பாதிப்பு தொடர்பாக தகவல்களைப் பெற தொலைபேசி எண்ணான 1800 309 3793 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டில் உள்ளவர்கள் மிஸ்டு கால் கொடுப்பதற்காக +91 80 6900 9900 என்ற எண்ணும், நேரடியாகப் பேசுவதற்காக +91 80 6900 9901 என்ற எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள 92895 16712 என்ற கைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தியத் தூதரகம் அவசர எண்கள் அறிவிப்பு:
இதற்கிடையில், நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர எண்களை அறிவித்துள்ளது. +977 985 131 6807, +977 970 910 7500 ஆகிய எண்களில் தங்களின் உறவுகள் பற்றி விவரம் அறிய, தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
பிஹார் தலைமைச் செயலர் உத்தரவு:
கங்கையின் கிளை ஆறுகளான கோசி, கண்டக் ஆறுகள் நேபாளத்திலும், பிஹாரிலும் ஓடுகின்றன. அதனாலேயே இந்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிஹாரிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் தலைமைச் செயலர் பிரத்யாயா அம்ரித், காணொளிக் காட்சி மூலாம் கோசி, கண்டக் ஆறு பாயும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நேபாள திடீர் வெள்ளப் பெருக்கை கவனத்தில் கொண்டு ஆற்றங்கரையோரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா உதவிக்கரம்:
நேபாள திடீர் வெள்ளப் பெருக்கு தொடர்பாக நேபாள பிரதமர் பலேந்திரா ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் துயர்மிகு நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் அனைத்துவிதமான உதவிகளையும் இந்தியா செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.