சொத்துக்குவிப்பு வழக்கில் இமாச்சலபிரதேச முதல்வர் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் உள்ளிட்டோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைவருக்கும் சிறப்பு நீதிபதி வீரேந்திர குமார் கோயல் ஜாமீன் வழங்கினார்.முன்னதாக, வீரபத்ர சிங் உள் ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது.
“இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்புள்ளது. வீரபத்ர சிங் முதல்வராக இருப்பதால் அவருக்கு எதிராக சாட்சியம் கூற சாட்சிகள் அச்சப்படுவார்கள். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என சிபிஐ வாதிட்டது.
வீரபத்ர சிங் உள்ளிட்டோர் தங்கள் ஜாமீன் மனுவில், “வழக்கில் விசாரணை முடிந்து, சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது” என்று தெரிவித்துள்ளனர்.
தாங்கள் ஜாமீனில் இருந்தால் வழக்கை சிறப்பாக நடத்த முடியும் எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்று அனைவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
2009 மே முதல் 2012 ஜூன் வரை மத்திய உருக்கு அமைச்சராக வீரபத்ர சிங் இருந்தபோது, வருவாய் ஆதாரங்களுக்கு பொருந்தாத வகையில் ரூ.10.30 கோடிக்கு சொத்துகள் சேர்ந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்த் சவுகான் உள்ளிட்ட 8 பேர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.