படம்: பிடிஐ 
இந்தியா

பிரதமர் மோடியுடன் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு - இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க ஆர்வம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று சந்தித்து பேசினார். இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவு குறித்து இருவரும் விவாதித்தனர்.

சர்வதேச நிதி நிறுவனமான ஆசிய வளர்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ஏடிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியை ஏடிபி தலைவர் மசட்சுகு அசகாவா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு மற்றும் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு ஏடிபியின் உதவி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்தியாவுக்கான நிதியுதவி திட்டத்தை ஏடிபி இறுதி செய்துள்ளது. பிரதமரின் கதி சக்தி திட்டம், எதிர்கால நகரங்களை உருவாக்குதல், உள்நாட்டு வளங்களை திரட்டுதல், பின்தங்கிய மாவட்டங்களில் அடிப்படை சேவைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய திட்டங்களுக்கு ஏடிபி ஆதரவு அளிக்கும். இத்திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 25 பில்லியன் டாலர் (ரூ.2.07 லட்சம் கோடி) கடனுதவி வழங்க ஏடிபி முன்வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் மசட்சுகு அசகாவா எடுத்துரைத்தார்.

மேலும் ஜி20 அமைப்பின் செயல் திட்டங்களுக்கு ஏடிபி ஆதரவாக இருக்கும் என அவர் உறுதி தெரிவித்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT