இந்தியா

“இந்தியா குறித்த உலகின் பார்வையை கரோனா தடுப்பூசி விநியோகம் மாற்றிவிட்டது” - ஜெய்சங்கர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கிய செயல், இந்தியா குறித்த உலகின் பார்வையை மாற்றிவிட்டது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஜெய்சங்கர், அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம்: ''சர்வதேச அளவில் இன்று இந்தியாவின் நிலை மிக உயர்ந்ததாக, மிக வலிமையானதாக உள்ளது. முன்பைக் காட்டிலும் தற்போது நமது சிந்தனையிலும் செயலிலும் தெளிவு கூடி இருக்கிறது. சர்வதேச அளவிலான மிகப் பெரிய பிரச்சினைகளில் இந்தியாவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. தவிர்க்க முடியாத சர்வதேச சக்தி இந்தியா என்பதை இன்று நம்மால் நிரூபிக்க முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு விஷயம் நமது நாடு குறித்த கண்ணோட்டத்தை மாற்றி இருக்கிறது என்று கேட்டால், நிச்சயம் தடுப்பூசி விநியோகம்தான். உலக நாடுகளுக்கு நாம் நமது தடுப்பூசிகளை வழங்கிய செயல், நமது நாடு குறித்த கண்ணோட்டத்தை மாற்றிவிட்டது.

சீனா விஷயத்தில் நாம் தற்காப்பு உணர்வோடு இருப்பதாகவும் இணக்கமாகச் செல்வதையே தேர்வு செய்வதாகவும் ராகுல் காந்தி கூறி இருப்பதில் உண்மை இருக்கவில்லை. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு ராணுவத்தை அனுப்பியது யார்? ராகுல் காந்தியா? பிரதமர் நரேந்திர மோடிதானே? எல்லையில் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

இந்திய தூதராக நான் சீனாவில் பணியாற்றி இருக்கிறேன். இரு நாட்டு எல்லை பிரச்சினை குறித்து நன்கு அறிவேன். அதேநேரத்தில், அதில் எனக்கு போதிய ஞானம் இல்லை என்று ராகுல் காந்தி கூறினால், நான் அவருக்கு ஒன்று சொல்வேன். அவருக்கு அந்த ஞானம் இருக்குமானால், அவர் கூறுவதை நான் கவனிப்பேன்.

நான் நரேந்திர மோடியை கடந்த 2011ம் ஆண்டு சீனாவில்தான் முதன்முதலில் பார்த்தேன். அப்போதே அவர் என்னை ஈர்த்தார். நிறைய முதல்வர்கள் வருவார்கள் செல்வார்கள். ஆனால், அவர் என்னை ஈர்த்ததற்குக் காரணம், அவர் மிகச் சிறப்பான தயாரிப்போடு வந்ததுதான். அவர் என்னை அமைச்சரவையில் சேருமாறு கேட்டார். சேர்ந்தேன். பிறகு குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஆனேன். ஒரு எம்.பியாக நான் குஜராத்திற்குச் செய்ய வேண்டியதை செய்கிறேன். ஒவ்வொரு நாளுமே ஆழமாக கற்பதற்கான வாய்ப்பைத் தரக்கூடியதாகவே உள்ளன.

ஒரு அதிகாரியாக இருப்பதற்கும் அமைச்சராக இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்கிறேன். நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் 40 ஆண்டுகள் நான் அமர்ந்திருக்கலாம். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினருக்கான அனுபவமாக அது இருக்காது. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒரு குழு அமைச்சரவை. உங்களுக்கு என்று சொந்த கருத்து இருக்கலாம்; நீங்கள் மிகப் பெரிய பின்னணியை கொண்டிருக்கலாம். அதற்காக, உங்கள் விருப்பப்படி தனித்து இயங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது இந்த அமைச்சரவையில் நடக்காது. அமைச்சரவையின் அங்கமாக நீங்கள் இருக்கும்போது கற்பதற்கு அதிகம் இருக்கும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT