லக்னோ: "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஏனெனில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவை" என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ், "சாதிவாரி கணக்கெடுப்பு என்பது கட்சியின் புதிய கோரிக்கை கிடையாது. முன்பே சாமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்பது சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டும் தான் சாத்தியமாகும்.
முதல்வர் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. சாதிவாரி கணக்கொடுப்புக்கு பின்னர் மக்கள் உரிய மரியாதையை பெறுவார்கள், இல்லையெனில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் கனவு நிறைவடையாமலேயே போகும்.
ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, 45 வயது பெண்மணியும் அவரது மகளும் தங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்ததது மிகவும் துரதிஷ்ரவசமானது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.