பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

11-வது குழந்தை பெற்ற பிறகு கருத்தடை செய்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்

செய்திப்பிரிவு

கியான்ஹர்: ஒடிசாவின் கியான்ஹர் மாவட்டத்தில் புயான் என்ற பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அங்கு வாழ்பவர் ரபி டெடூரி (40). தினக்கூலியாக இருக்கிறார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அதன்பின், 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு பெண்குழந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டது.

இந்நிலையில், ஜானகிக்கு கடந்த ஜனவரி 19-ம் தேதி 11-வது குழந்தை பிறந்தது. அதன்பின் ஆஷா தொண்டு நிறுவனத்தினரின் அறிவுரையை ஏற்று பிப்ரவரி 14-ம் தேதி ஜானகி கருத்தடை செய்து கொண்டார்.

பின்னர் குழந்தையுடன் வீட்டுக்கு சென்ற ஜானகியை அவரது கணவர் ரபி சேர்க்க மறுத்து துரத்திவிட்டார். இதுகுறித்து ரபி கூறும்போது, ‘‘எங்கள் பழங்குடியினத்தில் கருத்தடை செய்து கொண்ட பெண்களை, எந்த சடங்கிலும் சேர்க்க மாட்டார்கள். என் மனைவிக்கு கருத்தடை செய்ய போவதுகுறித்து என்னிடம் ஆஷா பணியாளர்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனக்கு தெரியாமலேயே கருத்தடை செய்துள்ளனர்’’ என்றார்.

இதுகுறித்து திமிரியா பகுதி ஆஷா சேவகர் பிஜய் லட்சுமி சாஹு கூறும்போது, ‘‘ஜானகியை வீட்டில் சேர்த்து கொள்ளும்படி ரபியிடம் பல முறை கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு அவர் தயாராக இல்லை. இந்த சூழ்நிலையில், ஜானகி, அவரது குழந்தையின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார். இந்நிலையில், ரபி - ஜானகி விவகாரம் குறித்து விசாரணை நடத்த கியான்ஹர் மாவட்ட ஆட்சியர் ராமச்சந்திர கிஸ்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT