இந்தியா

ராஜஸ்தானில் பிஎப்ஐ.யுடன் தொடர்புடைய 7 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புடன் தொடர்புடைய 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பிஎப்ஐ அமைப்பு இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ மற்றும்அந்த அமைப்புடன் தொடர்புடைய பல அமைப்புகளின் அலுவலகங்கள், அதில் தொடர்புடையவர்களின் வீடுகளில் என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இந்தியாவில் பிஎப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தடை செய்தது.

அதற்கு முன்னதாக என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து என்ஐஏ செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவில் 3 இடங்களிலும், சவாய் மதோபூர், பில்வாரா, பண்டி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பல டிஜிட்டல் கருவிகள், ஏர் கன், கூரிய ஆயுதங்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேற்கூறிய 7 இடங்களிலும்பிஎப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புள்ளவர்களின் வீடு, அலுவலகங் களில் இந்த சோதனை நடத்தப் பட்டது.

இதில் ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தைச் சேர்ந்த சாதிக் சராப், கோட்டாவை சேர்ந்த முகமது ஆசிப் மற்றும் பிஎப்ஐ நிர்வாகிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததற்கான தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு என்ஐஏ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

முன்னதாக பிஎப்ஐ அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வந்தது. அப்போது கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு தடை விதித்தது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் கூறும்போது, ‘‘பல்வேறு குற்றச் செயல்கள், தீவிரவாத வழக்குகளில் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிஎப்ஐ அமைப்பினர் தொடர்ந்து வன்முறை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தீவிர விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கல்லூரி பேராசிரியரை வெட்டியது, மற்ற மதநம்பிக்கை உள்ளவர்களை கொலை செய்தது போன்ற பல வழக்குகளில் பிஎப்ஐ அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது’’ என்று தெரிவித்தது.

SCROLL FOR NEXT