பெங்களூரு: குல்பர்காவில் உள்ள தர்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் நேரத்தில் இந்துக்கள் சிவராத்திரி சிறப்பு பூஜை மேற்கொள்வதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஆலந்த் நகரில் பழமைவாய்ந்த லாடில் மதாக் தர்கா உள்ளது. சூஃபி துறவி ஒருவரின் நினைவால் கட்டப்பட்டுள்ள இந்த தர்காவில் ராகவ சைதன்ய சிவலிங்கமும் உள்ளது. எனவே கடந்த சில ஆண்டுகளாக இந்து அமைப்பினர் அங்கு சிவராத்திரி சிறப்பு பூஜை நடத்த அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்திலும், மாவட்ட நிர்வாகத்திலும் கோரி வந்தனர். அனுமதி அளித்தால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஆலந்த் நகர் இந்து சேவா சங்கம் சார்பில் தர்காவில் சிவராத்திரி பூஜை நடத்த அனுமதி கோரி கர்நாடக உயர் நீதிமன்றம் குல்பர்கா கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பு அளித்தது. அதில், ''சம்பந்தப்பட்ட தர்காவில் முஸ்லிம் மற்றும் இந்துக்களின் வழிபாட்டு தலங்கள் இருப்பதால் இரு தரப்பினரும் அமைதியாக வழிபாடு மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். சனிக்கிழமை (நேற்று) சூஃபி துறவியின் நினைவு நாள் என்பதால் காலை 8 மணி முதல் மதியம் 1 வரை முஸ்லிம் வகுப்பை சேர்ந்த 15 பேர் தொழுகை நடத்தலாம்.
சிவராத்திரியை முன்னிட்டு அதே சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இந்து வகுப்பை சேர்ந்த 15 பேர் சிவலிங்கத்தை வழிபடலாம். ஒரே நாளில் இரு தரப்பினரும் வழிபாடு மேற்கொள்வதால் அனைவரும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். கர்நாடக அரசு பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ''என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து முஸ்லிம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
குல்பர்கா தர்காவில் முஸ்லிம்களும், இந்துக்களும் ஒரே நேரத்தில் வழிபாடு மேற்கொள்வதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆலந்த் நகரில் 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் போடப்பட்டு, வெளியூர் ஆட்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வடகர்நாடகாவில் பதற்றமான பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்து, முஸ்லிம் பிரிவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் சிசிடிவி, ட்ரோன் ஆகியவற்றின் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பதற்றம் காரணமாக வடகர்நாடகாவில் சிவராத்திரி பூஜை, பேரணி உள்ளிட்டவற்றை நடத்த போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.