மும்பை: சிவசேனா கட்சியின் பெயரும், அதன் வில் அம்பு சின்னத்தையும் மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்ட்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், உத்தவ் தாக்கரே அணியினர் சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரையும் வைத்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு குறித்து ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே, பால் தாக்கரே நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இவை அனைத்தும் பாலாசாகேப் தாக்கரேவின் ஆசியுடன் நடந்துள்ளது. அவருடைய ஆசியுடன் நாங்கள் அரசாங்கத்தை நிறுவினோம், அவருடைய சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். அதனால்தான் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "ஷிண்டே தரப்பு சிவசேனா சின்னத்தை திருடிவிட்டார்கள். நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நம்பிக்கையை இழக்க மாட்டோம். இப்போதைக்கு, ஷிண்டே தனது திருட்டில் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஷிண்டே எப்போதும் துரோகிதான்.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலை. இப்போது பிரதமர் செங்கோட்டையில் இருந்து ஜனநாயகம் இறந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும். உண்மையான வில் மற்றும் அம்பு எங்களிடம் உள்ளது. அவர்கள் (ஷிண்டே அணி) இவற்றை காகிதத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள்" என்று ஆவேசமாக பேசினார்.
முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
இதைத் தொடர்ந்து கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவையின் அன்றைய துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே ஷிண்டே தரப்பில் துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, கடந்த 2022 ஜூன் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. அதன்பின், உத்தவ் தாக்கரே மற்றும் ஏகாந்த் ஷிண்டே என இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் மீது உரிமைக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகிய நிலையில் எட்டுமாத தாமதத்துக்கு பிறகு தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்புக்கு சின்னத்தையும், கட்சியையும் வழங்கியுள்ளது.