புதுடெல்லி: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவில் இருந்தும் மீட்புக் குழுவினர் சென்று அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் இந்தியா அனுப்பியுள்ளது. நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கியில் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும் வண்ணம் இந்த அவசரகால நிவாரணக் குழு அனுப்பப் பட்டுள்ளதாகவும் இதற்கு ஆபரேஷன் தோஸ்த் என்று பெயர் வைத்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் துருக்கி சென்றுள்ள இந்திய மீட்பு படையில் மேஜர் பீனா திவாரி ஒரே பெண் மருத்துவ அதிகாரி இடம்பெற்றுள்ளார். 99 மருத்துவ அதிகாரிகள் அடங்கிய இந்தியக் குழு துருக்கி சென்றுள்ளது.
இந்நிலையில் டாக்டர் பீனா திவாரி, துருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இருக்கும் புகைப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘இந்திய ராணுவம் உலகிலேயே உள்ள மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக உள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ மீட்புக் குழுவினருக்கு மிகப் பெரிய அனுபவம் இருக்கிறது.
மேஜர் பீனா திவாரி, ஒரு சிறுமியை மீட்டு இந்திய ராணுவம் அமைத்துள்ள தற்காலிக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த புகைப்படம் இந்தியாவின் உலகளாவிய பிம்பமாக இருக்க முடியும்... இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.