தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் என்.டி.ஆர் (கோப்புப்படம்) 
இந்தியா

என்டி.ராமாராவ் உருவம் பொறித்த ரூ.100 வெள்ளி நாணயம் - நூற்றாண்டையொட்டி மத்திய அரசு வெளியிடுகிறது

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் நூற்றாண் டையொட்டி, விரைவில் அவரது உருவப்படம் பொறித்த ரூ.100 வெள்ளி நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.

என்.டி. ராமாராவ் சினிமா துறையில் கால்பதித்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். பின்னர், காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய ஆந்திர மாநிலத்தில், 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் எனும் கட்சியை தொடங்கி, வெறும் 9 மாதங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆட்சியை பிடித்து கின்னஸ் சாதனை புரிந்தார்.

1983-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை நடத்திய என்.டி.ராமாராவ் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தினார்.

ஆந்திராவில் காங்கிரஸ் அல்லாத முதல்வராக முதலில் அரியணை ஏறியவர் என்.டி. ராமாராவ். இவர் கடந்த 1923-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி பிறந்தார். தற்போது என்.டி. ராமாராவின் நூற்றாண்டு நடைபெற்று வருகிறது. இதை பெருமைப்படுத்தும் வகையில், மத்திய அரசு விரைவில் என்.டி.ராமாராவ் உருவப்படம் பொறித்த ரூ.100 வெள்ளி நாணயத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கான புகைப்படங்களை தேர்வு செய்ய நேற்று என்.டி.ஆரின் மகளும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான புரந்த ரேஸ்வரியை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில், மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் சிலர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் என்.டி.ஆரின் 3 புகைப்படங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

SCROLL FOR NEXT