இந்தியா

மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்த காங்கிரஸ் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள், அதன் தோல்விகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் பொது பிரச்சார இயக்கம் தொடங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளது. இந்த 3 ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினை, உள்நாட்டுப் பாது காப்பு, மகளிர் பாதுகாப்பு, பலாத்கார சம்பவங்கள், தலித்து கள் மீதான கொடுமைகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பு போன்ற வற்றுக்கு தீர்வு காணப்பட வில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரந்தீப் சிர்ஜேவாலா, சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஆர்பிஎன் சிங், சுஷ்மிதா தேவ், திவ்யா ஸ்பான்தானா உள்ளிட்டோர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது ரந்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, ‘‘மத்திய அரசின் தோல்விகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம் காங்கிரஸ் கட்சி எடுத்துச் சொல்லி அம்பலப்படுத்தும். இதுதொடர்பாக அடுத்த 24 மாதங்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்படும்” என்றார்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியதாவது: நல்லாட்சி வழங்குவோம் என கோஷம் எழுப்பி மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த மோடி அரசு கடந்த 3 ஆண்டுகளில் மக்களின் நல்லாட்சி கனவைத் தகர்த்து விட்டது. நாட்டில் சகிப்பின்மையை வளர்க்கும் சூழல் நிலவுகிறது. இது பற்றி விமர்சிப்போர் மீது தேச விரோதிகள் என்கிற முத்திரை குத்தப்படுகிறது.

மக்கள் எதை உண்ண வேண்டும், எதை கற்றுக் கொள்ளவேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கிறது. பாஜக வின் கொள்கைகளை மக்கள் மீது திணிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சச்சின் பைலட் கூறியபோது, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக சாக்குபோக்கு சொல்லி வருகிறது. காங்கிரஸை பொறுத்தவரை மக்களிடம் பொய் சொல்ல மாட்டோம், மாற்று ஆட்சிக்கான திட்டத்தை தயாரித்து மக்கள் முன்வைப்போம் என்று கூறினார்.

மோடி அரசு கடந்த 3 ஆண்டுகளில் மக்களின் நல்லாட்சி கனவைத் தகர்த்து விட்டது. நாட்டில் சகிப்பின்மையை வளர்க்கும் சூழல் நிலவுகிறது.

SCROLL FOR NEXT