ஜார்கண்டில் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 6 பேர் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் செரைகெலா- கர்ஸ்வான், சிங்பும் மாவட்டங்களில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல் சுற்றி வருவதாக கிராம மக்களிடையே தகவல் பரவியது.
இந்நிலையில், சிங்பும் மாவட்டத் தில் பக்பீரா காவல் நிலையத்துக்கு நகாதி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் விகாஷ் குமார் வர்மா, கவுதம் குமார் வர்மா, கங்கேஷ் குப்தா ஆகிய 3 பேர் சுற்றித் திரிந்தனர்.
போலீஸ் வாகனங்கள் தீக்கிரை
அப்போது அவர்களைச் சுற்றி வளைத்த கிராம மக்கள், 3 பேர் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் மீது, கிராம மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும் போலீஸாரின் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அங்கு குறைவான எண்ணிக்கையிலான போலீஸார் சென்றதாலேயே பொதுமக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் ஆனந்த் கூறுகையில், “நகாதி பகுதியில் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கிராமத் தினரின் ஆவேசத் தாக்குதலால் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் வயதான பெண் ஒருவரும் படுகாயம் அடைந் துள்ளார்” என்றார்.
அதேபோல், செரைகெலா மாவட்டத்தில் குழந்தைக் கடத்தல் கும்பல் என்ற சந்தேகத்தின் பேரில் கால்நடை விற்பனையாளர்களான ஷஜ்ஜு, நயீம், சிராஜ்கான் ஆகியோர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
சாலை மறியல்
இதற்கிடையே, 6 பேர் கொல்லப் பட்டதைக் கண்டித்து, ஜக்சாலை, பேக்பெரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தடுப்பு களை அமைத்து அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து கடுமையாகப் பாதிக் கப்பட்டது. 6 பேரைக் கொலை செய்த கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.