டெல்லி சட்டப்பேரவையில் இன்று மிகப்பெரிய நாடக நிகழ்வு நடந்தேறியுள்ளது. நீக்கப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா மற்றும் சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடையே கைகலப்பு ஏற்பட்டு பேரவை பரபரப்பானது.
மாநில ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பதாகையை நீக்கப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா காட்ட சர்ச்சை கிளம்பியது.
இதனையடுத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் மதன்லால், ஜர்னைல் சிங், ஆகியோர் கபில் மிஸ்ரா மீது பாய்ந்து அவரை இழுத்துச் சென்றனர். அவைத்தலைவர் ராம் நிவாஸ் கோயல் உடனே அவரை வெளியே அழைத்துச் செல்லப்பட வேண்டும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கபில் மிஸ்ரா, “எனக்கு பேச அனுமதி அளிக்கப்படவில்லை. நான் பேசத் தொடங்கியவுடன் 4-5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர். குரலை அடக்கி ஒடுக்க எம்.எல்.ஏ.க்களே அடியாளாக மாறியிருப்பது இதுவே முதல்முறை” என்றார்.
இந்தச் சம்பவத்துக்கு மனீஷ் சிசோடியாதான் காரணம் என்கிறார் கபில் மிஸ்ரா.