புதுடெல்லி: சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்கு கூடுதலாக 7 பட்டாலியன்களை பணியில் அமர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்கு கூடுதல் படைகளை ஏற்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன் விவரம்: ''சீனாவை ஒட்டிய எல்லையை பாதுகாத்து வரும் இந்தோ - திபெத்தியன் எல்லை போலீஸ் படை (ITBP) பிரிவில் கூடுதலாக 7 பட்டாலியன்களை சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கூடுதலாக 9,400 வீரர்கள் இந்த பிரிவில் இணைவார்கள். இந்திய - சீன எல்லையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள 47 எல்லை நிலைகளிலும், 12 முகாம்களிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.''
கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீன துருப்புகள் குவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 1962ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்பட்டதை அடுத்து, இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் படை சுமார் 90 ஆயிரம் வீரர்களைக் கொண்டதாக பலப்படுத்தப்பட்டது. தற்போது இவர்கள் 3,488 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட எல்லையை பாதுகாத்து வருகிறார்கள்.
இந்நிலையில், இப்பகுதியில் கூடுதல் வீரர்களை களத்தில் இறக்கும் நோக்கில் மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.