இந்தியா

கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த நீதிபதி கர்ணன் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

ஏஎன்ஐ

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கவுல் உட்பட பல்வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது.

தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனை 6 மாதம் சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்ணனை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீஸில் தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை, ஆந்திரா மற்றும் கர்ணனின் சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திலும் அவரை தேடி கொல்கத்தா போலீஸார் விரைந்தனர்.

இந்த சூழலில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரியும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் விண்ணப்பம் அளித்தார். அதைப் பதிவாளர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

எனினும் இதுதொடர்பாக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யலாம். நீதிபதிகள் கிடைக்கும்போது அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நீதிபதி கர்ணனுக்கு எதிராக பிறப்பித்த கைது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், ‘‘நீங்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். விசாரணையின் போது உங்கள் மனு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்து, அவசர வழக்காக மனுவை விசா ரிக்க மறுத்துவிட்டார்.

SCROLL FOR NEXT