ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் மாறன் சகோதரர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகிய இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த 2-ம் தேதி மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தயாநிதி மாறம், கலாநிதி மாறன் விளக்கமளிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.