இந்தியா

அமித் ஷா தலைமையின் கீழ் பாஜக வலுபெறும்: மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

பாஜகவின் தேசியத் தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டது, கட்சி மேலும் வலுபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜகவின் புதிய தேசியத் தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

பாஜகவின் புதிய தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதை, நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பாரதிய ஜனதா கட்சியில் சாதாரண செயல்வீரராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அமித் ஷா, தன் அயராத உழைப்பாலும் உறுதியாலும் அரசியல் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அமித் ஷாவின் தலைமையின் கீழ் பாஜகவின் செல்வாக்கு மிகுதியாவதுடன், கட்சி வலுபெறும்.

இதுவரையில் ராஜ்நாத் சிங்கின் தலைமையில் கட்சி பல வெற்றிகளை கண்டது. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரின் ஆசிர்வாதத்தாலும் மற்ற வளரும் செயல் வீரர்களின் உழைப்பினாலும் பாஜக பல்வேறு உச்சங்களை இனி வரும் காலங்களில் அடையப் போகிறது.

வளமான மற்றும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கை, நடைமுறையில் சாத்தியமாகப் போகிறது" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT