இந்தியா

எல்.கே.அத்வானியுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

பிடிஐ

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சந்தித்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வந்த அத்வானி நீதிமன்றம் செல்வதற்கு முன்னதாக மாநிலத்தின் முக்கியப் புள்ளிகள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அத்வானி தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை சந்தித்தார். அப்போது ஆதித்யநாத் பூச்செண்டு கொடுத்து அத்வானியை வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது உ.பி.யின் முக்கிய பாஜக பிரமுகர்களும் இருந்தனர்.

அத்வானி, ஜோஷி, உமா பாரதி வருகை:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர்கள் மூவரும் லக்னோ வந்தடைந்தனர். முன்னதாக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியிருந்தனர். ஆனால் விலக்கு அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தளத்தியது என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT