இந்தியா

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: மாட்டிறைச்சி தடையால் பாஜக வெற்றி பெறுவதில் சிக்கல்

செய்திப்பிரிவு

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா வில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளன. இதில் பாரதிய ஜனதா வுக்கு இருந்த வெற்றி வாய்ப்பு, மாட்டிறைச்சி மீதான தடையால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று அங்கு முதல்முறையாக ஆட்சி அமைத் தது. இதையடுத்து மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் நாகாலாந்து, மேகாலயாவிலும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் இறைச்சிக்காக கால்நடை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால் இம்மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ள னர். இந்த மாநிலங்களில் பாஜகவினர் உள்ளிட்டோர் விரும்பி உண்ணும் உணவாக மாட்டிறைச்சி உள்ளது. இந்நிலையில் இங்கு பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்யும் நாகா மக்கள் முன்னணி அரசு, கால்நடைகள் தொடர்பான மத்திய அரசின் புதிய உத்தரவை அமல்படுத்த மறுத்துள்ளது.

இதுகுறித்து நாகாலாந்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இம்காங் இம்சென் கூறும்போது, “நாகாலாந்தில் கால்நடை தொடர்பான எந்த தடையையும் அமல்படுத்த தேவையில்லை. இத்தடை இங்குள்ள பாரம்பரிய உணவு முறைக்கு தடையாக அமைந்துவிடும். ஏனெனில் இங்கு மாட்டிறைச்சி என்பது முக்கிய உணவாக உள்ளது” என்றார்.

மேகாலயாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அடுத்த பிப்ரவரியுடன் இந்த ஆட்சி நிறைவடைய உள்ளது. இங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற விரும்புகிறது. எனவே, இக்கட்சியின் ஷில்லாங் தொகுதி மக்களவை உறுப்பினரான வின்சென்ட் ஹெச்.பாலா. மாட்டிறைச்சி மீதான தடையை வாபஸ் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தடைக்கு மறுநாள் மேகாலயா பாஜக மாநிலத் தலைவர் நளின் கொஹலிக்கு கட்சியின் மாநில துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ஜே.ஏ.லிங்டோ கடிதம் எழுதினார். அவர் தனது கடிதத்தில், “மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து மேகாலயாவுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும். இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில் கட்சியை விட்டு வெளி யேறிவிடுவேன்” என்று எச்சரித் துள்ளார். இவரைப் போல கட்சியை சேர்ந்த பலர் மாட்டிறைச்சிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இதில், மேகாலயா, கரோ மலையின் துலி நகர பாஜக தலைவர் பெர்னார்ட் என்.மராக் ஒருபடி மேலே சென்றுள்ளார். இவர் வெளியிட்ட அறிவிப்பில், “மேகாலயாவில் பாஜக தலைவர்கள் பெரும்பாலானோர் மாட்டிறைச்சி உண்கின்றனர். இங்குள்ள கரோ இன மக்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சி ஆகும். ஆனால் அதன் விலை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. வரும் தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சி அமைந்தால் மாட்டிறைச்சி விலையை ஒழுங்குபடுத்தி குறைக்க வழி செய்வோம்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT