இந்தியா

‘இஒஎஸ்-07' உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகின்றன

செய்திப்பிரிவு

சென்னை: புவி கண்காணிப்புக்கான ‘இஒஎஸ்-07' உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள், சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் நாளை (பிப். 10) விண்ணில் ஏவப்படுகின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

இதேபோல, எடை குறைந்த செயற்கைக்கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. இவற்றின் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கிவிடும்.

அதன்படி சிறிய ரக 2 செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதால், அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, எஸ்எஸ்எல்வி வகையில் புதிய ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் இஒஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களுடன் நாளை (பிப். 10) காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, 156 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்பு மற்றும் எதிர்காலத் தேவைக்கான ஆய்வுப் பணிகளுக்கு பயன்படும்.

மேலும், அமெரிக்காவின் `ஜானஸ்', இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட `ஆசாதிசாட்-2' ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

156 கிலோ எடை கொண்ட இஒஎஸ்7 செயற்கை கோள் புவி கண்காணிப்பு, எதிர்காலத் தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும்.

SCROLL FOR NEXT