வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாரத் சேவாஸ்வரம் அமைப்பின் நூற்றாண்டு விழா மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களை, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவுவாயிலாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நகரங்கள் தூய்மையற்றதாகவும் சுகாதாரக்கேடு நிறைந்தவையாகவும் உள்ளன. கல்வியறிவின்மையும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் மிகப்பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. இவை அனைத்தும் களையப்பட வேண்டும்.
நம்மிடம் எல்லா வளங்களும் உள்ளன. நாம் ஏழைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் தூய்மையாக மாற்ற வேண்டும்.
தற்போதைய நிலையில் தூய்மை நகரங்களின் பட்டியலில் வடகிழக்கைச் சேர்ந்த 4 நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன்.
வடகிழக்கின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த பிராந்தியத்தில் ரூ.40,000 கோடியில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் படிப்படியாக மின் வசதி ஏற்படுத்தப்படும். ஷில்லாங் விமான விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். பல்வேறு சிறிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
ஆன்மிகமும் சேவைப் பணிகளும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று கூற்றை பாரத் சேவாஸ்வரம் அமைப்பு உடைத்துள்ளது. அந்த அமைப்பு ஆன்மிகத்துடன் பல்வேறு மக்கள் சேவைகளையும் இடைவிடாது ஆற்றி வருகிறது.
கடந்த 1923-ல் வங்கதேசத்தில் ஏற்பட்ட பஞ்சம், 1946 நவகாளி கலவரம்,1980 போபால் விஷவாயு கசிவு உள்ளிட்ட நெருக்கடியான நேரங்களில் பாரத் சேவாஸ்வரம் மிகச் சிறப்பாக மக்களுக்கு சேவையாற்றியது'' என்று பிரதமர் மோடி பேசினார்.