சென்னை: மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயார் செய்யப்பட்ட நீல நிற கோட்டை அணிந்துகொண்டு பிரதமர் மோடி புதன்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பிரதமர் மோடி இன்று (பிப்.8) நாடாளுமன்றத்தில் நீல நிற கோட் அணிந்து வந்தார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த கோட் மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களில் இருந்து தயார் செய்யப்பட்டது ஆகும்.
இந்தியன் ஆயில் நிறுவனம் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து சீருடைகளை உருவாக்கி உள்ளது. இந்தச் சீருடைகளை பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரம் தொடக்க நிகழ்வில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்வில், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் உருவாக்கிய நீல நிற கோட்டை பிரதமருக்கு வழங்கியது. இதை அணிந்துகொண்டு தான் பிரதமர் மோடி இன்றைய நாடளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மோடி இதை அணிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபோல் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை இந்தியன் ஆயில் நிறுவனம் தனது ஊழியர்களுக்கும் மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கும் அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 10 கோடிக்கும் மேற்பட்ட பெட் பாட்டில்களை மறுசுழற்ச்சி செய்யும் பணியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.