பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் முகவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை ராஜஸ்தான் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஹாசி கான் (55) என்ற இந்த நபர், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரை அவரது கிராமத்தில் பிடித்த போலீஸார் அவரிடமிருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர். ஜோத்பூரில் வைத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் டிஐஜி எச்.ராகவேந்திர சுகாசா கூறும்போது, “ஹாசி கான் 3 முறை பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருக்கு ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவரிடமிருந்து பெறப்பட்ட முக்கிய தகவல்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம். உள்ளூர் விவசாயியான இவரை சிறிது காலமாக நாங்கள் கண்காணித்து வந்தோம். மேலும் சில இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளோம். ஹாசி கான் இதுவரை கைது செய்யப்படவில்லை” என்றார்.