இந்தியா

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்திய தம்பதிக்கு ‘ஸ்கைப்’ மூலம் விவாகரத்து: நாட்டிலேயே முதன்முறையாக குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

நாட்டிலேயே முதல் முறையாக “ஸ்கைப்” மூலமாக ஒரு இளம் ஜோடிக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. கணவன் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரான நிலையில், மனைவி லண்டனில் இருந்து “ஸ்கைப்” மூலம் ஆஜராகி விவாகரத்து பெற்றார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தம்பதி, கடந்த 2015-ம் ஆண்டு மே 9-ம் தேதி காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் புனே-வில் வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தபோது, இருவருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஒரே நேரத்தில் கதவைத் தட்டியது. இதுவே அவர்களது திருமண வாழ்வுக்கும் வினையாகிப் போனது.

கணவனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கே சென்று விட்டார். ஆனால், மனைவிக்கு லண்டன் செல்ல வாய்ப்பு கிடைத் தும், அங்கே செல்ல முடிவில்லை. ஆனால், மனைவியால் வெளி நாடு வேலையை இழக்க விருப்ப மில்லை. இந்த விவகாரத்தில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி முதல் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். அதன்பின்னர் மனைவி லண்டன் சென்றுவிட்டார்.

இந்த வழக்கு புனே குடும்பநல நீதிமன்ற நீதிபதி வி.எஸ். மல்கன்பட்டே ரெட்டி முன்பு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி தாக்கலானது. இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் 29-ம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சிங்கப்பூரில் இருந்து வந்து கணவன் நேரில் ஆஜரானார். மனைவியால் லண்டனில் இருந்து வரமுடியவில்லை. “வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது” என அவர் பணிபுரியும் நிறுவனம் ஏற்கெனவே நிபந்தனை விதித்திருந்தது.

இதையடுத்து, அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுசித் முன்தாதா, “ஸ்கைப்” ஆப் மூலம் லண்டனில் இருந்தபடி மனைவியை ஆஜாராக அனு மதிக்கக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை முடிவில் கணவன், மனைவிக்கு விவாகரத்து வழங்கினார்.

இந்தியாவிலேயே “ஸ்கைப்” மூலமாக தம்பதிக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது இதுவே முதன்முறை யாகும்.

SCROLL FOR NEXT