இந்தியக் கடற்படையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன் பாட்டில் இருந்த 2 போர்க் கப்பல்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டது. இதற் கான விழா மும்பையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
ஐஎன்எஸ் கர்வார் (எம்67) மற்றும் ஐஎன்எஸ் காக்கிநாடா (எம் 70) ஆகிய இரண்டு கப்பல்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப் பட்டவை. இவை கடந்த 1986-ம் ஆண்டு, இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல்கள் கடல் பகுதியில் பதிக்கப்படும் கண்ணி வெடிகளை கண்டறிந்து, அவற்றை அகற்றும் பணியை மேற்கொண்டன.
இதில் ஐஎன்எஸ் கர்வார், காக்கி நாடா ஆகியன கடந்த 2013-ம் ஆண்டு வரை விசாகப்பட்டினத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. பின்னர் மும்பையைத் தலைமையிட மாகக் கொண்டு கடல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்தக் கப்பல்களில் 90 வீரர்கள் மற்றும் 6 அதிகாரிகளும் இருந்தனர். நவீன கப்பல்களுக்கு இணையாக இவை கடல் எல்லைப் பாதுகாப்பில் சிறப்பான சேவை ஆற்றின. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த 2 கப்பல்களும், நேற்று முன்தினம் அதிலிருந்து விடுவிக்கப்பட்டன.
ஐஎன்எஸ் கர்வார் கப்பல் கேப்டன் கவுசிக்தர், கமாண்டர் அமர்ஜித் சிங் யும்னாம் (ஐஎன்எஸ் காக்கிநாடா) மற்றும் வீரர்கள் ‘ஷல்யூட்’ அடித்து கப்பல்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா உள்ளிட்ட அதிகாரிகளும், வீரர்களும் கலந்துகொண்டனர்.