இந்தியா

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு தலைவர் உட்பட புதிய உறுப்பினர்கள் நியமனம்

பிடிஐ

சிறுபான்மையினர் நலன்களை பாதுகாக்கும் பணியில் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (என்சிஎம்) ஈடுபட்டு வருகிறது. இதில் தலைவர், துணைத்தலைவர் உட்பட மொத்தம் 7 பேர் உறுப் பினர்களாக இருப்பர். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட 7 உறுப்பினர்களும் ஓய்வு பெற்றனர். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பதவியும் காலியாக உள்ளன.

காலியாக உள்ள உறுப்பினர் பதவியிடங்களை நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தன. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பின.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கயாருல் ஹசன் என்சிஎம் தலைவராக நியமிக் கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபோல, கேரளாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜார்ஜ் குரியன், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் சுலேகா கும்பரே, குஜராத்தைச் சேர்ந்த சுனில் சிங்கி மற்றும் உத்வதா அதோர்னன் அஞ்சுமன் தலைமை மத போதகர் வட தஸ்துர்ஜி குர்ஷித் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மீதம் உள்ள 2 உறுப்பினர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகளை என்சிஎம் உறுப்பினர்களாக நிய மிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் முதன் முறையாக இந்த முறை சமூக ஆர்வலர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முதன்முறையாக ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் இக்குழுவில் இடம்பிடித் துள்ளனர். இந்தத் தகவலை சிறு பான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி யும் உறுதி செய்துள்ளார்.

SCROLL FOR NEXT